×

சபரிமலையில் நெரிசலை குறைக்க 23 மணி நேரம் 18ம் படி ஏற அனுமதி

திருவனந்தபுரம்: சபரிமலையில் நெரிசலை குறைப்பதற்காக 23 மணி நேரம் 18ம் படி ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் வருகை மிகவும் அதிகரித்து உள்ளது. ஆனால் அதற்கு ஏற்ப போதிய வசதிகள் செய்யப்படவில்லை. பக்தர்கள் பல மணி நேரம் நெரிசலில் காத்து கிடந்தனர். போதிய அனுபவம் இல்லாத போலீசாரை பணிக்கு நியமித்ததது தான் இதற்கு காரணமாகும். சபரிமலைக்கு விரதம் இருந்து இருமுடிக் கட்டுடன் வரும் பக்தர்கள் 18ம் படி ஏறி தரிசனம் செய்வதைத் தான் புண்ணியமாக கருதுகின்றனர்.

படியில் ஏறும் பக்தர்களுக்கு உதவுவதற்காக நல்ல திடகாத்திரமான அனுபவம் வாய்ந்த போலீசார் தான் வழக்கமாக நியமிக்கப்படுவார்கள். ஆனால் இந்த முறை 18ம் படி அருகே அனுபவம் இல்லாத போலீசார் நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த வருடம் தரிசனம் அதிகமாக இருந்த சமயங்களில் நிமிடத்திற்கு அதிகபட்சமாக 120 பேர் வரை ஏற்றப்பட்டனர். இந்த முறை 60 முதல் 70 பக்தர்கள் வரை மட்டுமே 18ம் படி ஏறுகின்றனர். இதுதான் நெரிசல் அதிகரிக்க முக்கிய காரணமாகும். போலீசுக்கும், தேவசம்போர்டு ஊழியர்களுக்கும் இடையே சரியான ஒத்துழைப்பும் இல்லை. சன்னிதானத்தில் நெரிசல் குறையாததால் பம்பை, நிலக்கல், எருமேலி உள்பட பல்வேறு இடங்களில் போலீசார் பக்தர்களை தடுத்து நிறுத்தி வைக்கின்றனர். இதனால் பக்தர்கள் வழியிலேயே பல மணி நேரம் காத்துக் கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இவ்வாறு வழியில் காத்துக் கிடக்கும் பக்தர்களுக்கு உணவோ, தண்ணீரோ கிடைப்பதில்லை. மேலும் சபரிமலை செல்லும் பக்தர்களின் வாகனங்களை பம்பையில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிலக்கல்லில் தான் நிறுத்த வேண்டும். இங்கிருந்து கேரள அரசு பஸ்சில் மட்டுமே பம்பைக்கு செல்ல முடியும். இந்த பஸ் போக்குவரத்தையும் போலீசார் அடிக்கடி நிறுத்தி வைக்கின்றனர்.மேலும் இந்த பஸ்களில் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் ஏற்றப்படுகின்றனர்.
கடந்த வருடம் நெரிசலை குறைப்பதற்காக நடை மூடப்பட்டிருக்கும் நேரத்திலும் பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இந்த முறை நடை சாத்தப்பட்டிருக்கும் மதியம் மற்றும் இரவு 11 மணிக்கு பின்னர் பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதிக்கப்படவில்லை. இதுவும் நெரிசல் அதிகரிக்க ஒரு காரணமாக அமைந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல் 23 மணி நேரம் பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் தற்போது சன்னிதானத்தில் அதிக நெரிசல் ஏற்படவில்லை. காங்கிரஸ் எம்எல்ஏ திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி கட்சித் தலைவர்கள் சபரிமலை சென்று பக்தர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். இதன் பின்னர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கூறுகையில், சபரிமலையில் பக்தர்களுக்கு எந்த வசதியும் செய்து தரப்படவில்லை. இங்கு மனித உரிமை மீறல் நடக்கிறது என்றார்.
இதற்கிடையே சன்னிதானம், பம்பை, நிலக்கல்லில் நியமிக்கப்பட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பதிலாக புதிய போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

* பக்தர்கள் சாலை மறியல்
எருமேலியில் இருந்து நேற்று முன்தினம் இரவு முதல் சபரிமலை செல்ல பக்தர்களின் வாகனங்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதை கண்டித்து எருமேலி-ரான்னி பாதையில் பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணிநேரத்திற்குப் பிறகு பக்தர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அந்த பாதையில் பல மணிநேரம் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

* ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சபரிமலை விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாகவே முன் வந்து வழக்கு எடுத்தது. இதில் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: சபரிமலையில் பக்தர்கள் அதிகமாக வந்தது மற்றும் தற்போது ஏற்பட்ட நிலைமை எதிர்பாராததாகும். இதை எளிதில் சமாளித்திருக்கலாம். ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு இல்லாமல் வருபவர்களை எக்காரணத்தாலும் சபரிமலைக்கு அனுமதிக்க கூடாது. பெண்கள், குழந்தைகளுக்கு தனி கவனம் செலுத்தவேண்டும். ஆன் லைன் முன்பதிவு செய்பவர்கள் எண்ணிக்கை 80 ஆயிரம். ஆனால் உடனடி முன் பதிவை 10 ஆயிரமாகவோ 5 ஆயிரமாகவோ கட்டுப்படுத்தவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

The post சபரிமலையில் நெரிசலை குறைக்க 23 மணி நேரம் 18ம் படி ஏற அனுமதி appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Thiruvananthapuram ,Sabarimalai ,
× RELATED சபரிமலையில் நெரிசலை குறைக்க உடனடி முன்பதிவு ரத்து